null
அஸ்வின் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது- கும்ப்ளே
- நிச்சயமாக இந்திய அணி இனி அவரை தவற விடும்.
- எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.
அஸ்வின் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
அஸ்வின் இந்தியாவிற்கு சாம்பியன் பந்துவீச்சாளராகவும், சாம்பியன் ஆல்-ரவுண்டராகவும் இருந்திருக்கிறார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மேட்ச் வின்னராக பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்து உள்ளார். அந்த மாதிரியான எதிர்பார்ப்பை தினம் தினம் சுமந்து கொண்டு இருப்பது அவ்வளவு எளிதல்ல. அதை அவர் வாழ்க்கை முழுவதும் சரியாகச் செய்து இருக்கிறார். நிச்சயமாக இந்திய அணி இனி அவரை தவற விடும்.
எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன். அதை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உங்களின் 2-வது அத்தியாயத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இது முதல் அத்தியாயத்தைப் போலவே புகழ்பெற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நிச்சயம் உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.