தமிழ்நாடு (Tamil Nadu)

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2023-11-23 05:03 GMT   |   Update On 2023-11-23 05:03 GMT
  • தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குரங்கணி, கொட்டக்குடி, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, தேனி, லெட்சுமிபுரம், வீரபாண்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் கும்பக்கரை அருவியில் இன்று 21-வது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் அங்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. போடி அருகே உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்காக 2000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பூர்வீக பாசனத்துக்காக மேலும் கூடுதலாக 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்று படுகையில் உள்ள உறைகிணறுகளை நிரப்பும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 17410 கன அடி தண்ணீரும், சிவகங்கை மாவட்டத்துக்கு 7165 கன அடி தண்ணீரும், மதுரை மாவட்டத்துக்கு 3970 கன அடி தண்ணீரும் என 3 மாவட்டத்துக்கும் சேர்த்து 28545 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் டி.வாடிப்பட்டி, தருமத்துப்பட்டி ராமநாயக்கன்பட்டி, செக்காபட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, அணைப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், துவரிமான், மதுரை, விரகனூர், சிலைமான், திருப்புவனம், எமனேஸ்வரம், பரமக்குடி, பார்த்தீபனூர் வழியாக ராமநாதபுரம் பாசன பகுதிக்கு செல்கிறது.

மேலும் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள முட்செடிகள், அமலைச் செடிகள் ஆகியவையும் அடித்துச் செல்லப்பட்டு பூர்வீக பாசனத்துக்காக தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 67.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 2477 கன அடி. நீர் திறப்பு 6099 கன அடி. நீர் இருப்பு 5238 மி.கன அடி.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது. நேற்று 133.75 அடியாக இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 1284 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4118 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5843 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 என முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 331 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

பெரியாறு 30.4, தேக்கடி 38.4, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 9.2, சண்முகாநதி அணை 18.6, போடி 47.8, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 40, பெரியகுளம் 29, வீரபாண்டி 46, அரண்மனைப்புதூர் 27, ஆண்டிபட்டி 17.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

Tags:    

Similar News