பயணிகளின் கனிவான கவனத்திற்கு: திருநெல்வேலி –திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரெயில் சேவை ரத்து
- லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
- திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
நெல்லை:
தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.