தமிழ்நாடு

அதிமுகவால்தான் நீங்கள் எம்.பி. ஆனீர்கள்: அன்புமணி ராமதாஸ்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

Published On 2024-04-16 13:56 GMT   |   Update On 2024-04-16 13:58 GMT
  • தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  • அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார். அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள்.

தருமபுரி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

தருமபுரியில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜனதா கூட்டணியில் பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி நமது கூட்டணியில் 2-வது இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. தற்போது 3-வது இடமல்ல. ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டார்கள். 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2-வது இடத்தில் பாமக இருந்தது. 3-வது இடத்தில்தான் பா.ஜனதா இருந்தது.

இந்த தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில் மக்கள் அதிமுக எம்.எல்.ஏ.-க்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் நாங்கள் உங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தோம்.

எங்களிடம் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார். அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது இந்த பகுதிக்கு கொண்டு வந்தாரா?. தமிழக மக்கள் பயன்படும் வகையில் பாராளுமன்றத்தில் பேசினாரா?. பிரதமரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள். அடிமையாக இருக்க பார்க்கிறீர்கள்.

மத்தியில் யார் என்பது எங்களுக்கு தேவையில்லை. மக்கள்தான் தேவை. மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தனித்து போட்டியிட்டால்தான் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச முடியும். உங்களுக்கு பதவி வேண்டும். அதனால் கூட்டணி அமைத்துள்ளீர்கள். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News