தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக 14 நாட்கள் மட்டும் பயிற்சி கொடுப்பது போதுமானது அல்ல- அன்புமணி ராமதாஸ்

Published On 2022-11-05 11:54 IST   |   Update On 2022-11-05 11:54:00 IST
  • அரசு பள்ளி மாணவர்களுக்கும் கையேடு மற்றும் வினா-விடை தொகுப்பை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் பயிற்சியை ஏதோ கடமைக்கு வழங்கப்படும் ஒன்றாக கருதாமல், தொழில்முறையானதாக மாற்ற வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19-ம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

நீட் பயிற்சி வகுப்புகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டாலும், ஓரளவு மேம்படுத்தப்பட்ட வடிவில் நடத்தப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அனைத்து பயிற்சி மையங்களிலும் நேரடியாக பயிற்சி அளிக்கப்படும்.

இதனால் மாணவர்கள் தங்களின் ஐயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத்தெளிவு பெற முடியும். குறிப்பிட்ட இடைவெளியில் மாதிரி தேர்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை மதிப்பிட முடியும். இது புதிய முறையின் சிறப்புகளாகும்.

எனினும், நவம்பர் மூன்றாவது சனிக்கிழமை தொடங்கும் நீட் பயிற்சி வகுப்புகளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரை, ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய நாள், பொங்கல் திருநாள், தேர்வுக்கு முந்தைய சனிக்கிழமை தவிர, அதிகபட்சமாக 14 நாட்கள் மட்டும் தான் நடத்த முடியும். தனியார் பள்ளிகளில் பயிலும் நகர்ப்புற பணக்கார மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை பயிற்சி பெறும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வெறும் 14 நாட்கள் மட்டும் பயிற்சி அளிப்பது போதுமானதாக இருக்காது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதற்கான மாற்று ஏற்பாடுகளை கல்வித்துறை செய்ய வேண்டும்.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அதற்கான கையேடுகளும், வினா-விடை தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. அவை நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள பெரும் உதவியாக உள்ளன.

அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கும் கையேடு மற்றும் வினா-விடை தொகுப்பை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல் வார சனிக்கிழமையில் நடத்தப்படும் பாடம் குறித்து அடுத்த வாரத்தில் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் பயிற்சியை ஏதோ கடமைக்கு வழங்கப்படும் ஒன்றாக கருதாமல், தொழில்முறையானதாக மாற்ற வேண்டும்.

அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்களில் குறைந்தது 100 பேராவது, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இல்லாமல் பொதுப்போட்டி பிரிவில் மருத்துவப் படிப்பில் சேரும் நிலையை உருவாக்க வேண்டும்.

அதற்கேற்ற வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News