எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் - ஜி.கே.வாசன்
- 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
- லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடியும், கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2,020 கோடியும், 6,100 கி.மீ நீள சாலைக்கு 2,200 கோடியும், 1 லட்சம் வீடுகள் கட்ட 3,500 கோடியும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 6,668 கோடியும் என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியானது கடந்த ஆண்டுகளில் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது போல அமைந்து நிறைவேற்ற முடியாத திட்டங்களாக, அறிவிப்புகளாக மட்டுமே அமையும். ஏழை, எளிய மக்களின் நிலம், மனை, பத்திரம், பட்டா சம்பந்தமாக அவர்களுக்கு உரியதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லை.
குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அம்சங்கள் இடம் பெறவில்லை. மிக முக்கியமாக போதைப்பொருட்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கை கடுமையாக்க முக்கிய அம்சங்கள் இடம் பெறாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.
குறிப்பாக நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.
எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.