தமிழ்நாடு

டாஸ்மாக் மது விற்பனை 6 சதவீதம் வரை வீழ்ச்சி

Published On 2022-06-24 14:30 IST   |   Update On 2022-06-24 14:30:00 IST
  • டாஸ்மாக் கடைகளில் சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்கள் தலா 40 சதவீதம் என மொத்தம் 80 சதவீதம் அளவுக்கு விற்பனையாகிறது.
  • தென் சென்னை மாவட்டத்தில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.20 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டன. அதே நேரத்தில் சாதாரண ரக மதுபானங்களின் விலை அதில் இருந்து பாதி அளவே உயர்த்தப்பட்டது.

நடுத்தர ரகத்தில் 180 மி.லி பிராந்தி மதுபானம் ரூ.20 உயர்த்தப்பட்டது. அதேநேரத்தில் சாதாரண ரகத்தில் ரூ.10 விலை உயர்த்தப்பட்டது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு உயர்ரக மதுபானங்களின் விலை ரூ.80 வரை உயர்த்தப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை 4 முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விலை உயர்த்தப்பட்ட பிறகு உயர் ரக மதுபானங்களின் விற்பனை சிறிய அளவே குறைந்தது. ஆனால் பெரும்பாலானோர் நடுத்தர ரக மதுபானங்களையே வாங்குகிறார்கள். அவர்கள் சாதாரண ரக மதுபானங்களுக்கு மாறியதால் நடுத்தர ரக மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது.

மதுபானங்களின் வினியோகம் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இதன் விளைவாக விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்பவர்கள் அதிக லாபம் பெறுவதற்காக உயர்ரக மற்றும் நடுத்தர ரக மதுபானங்களையே அதிகம் சப்ளை செய்கிறார்கள். இதனால் சாதாரண ரக மது பானங்களின் இருப்பு தேவையை விட குறைவாகவே உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்கள் தலா 40 சதவீதம் என மொத்தம் 80 சதவீதம் அளவுக்கு விற்பனையாகிறது. உயர் ரக மதுபானங்கள் 20 சதவீதம் விற்பனையாகிறது.

இந்த நிலையில் தென் சென்னை மாவட்டத்தில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுபானங்களை குடிமகன்கள் வாங்க வைப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின்போது கடந்த 2019-ம் ஆண்டு மே மாதத்திலும் விற்பனை குறைந்திருந்ததாக கூறப்பட்டது. தற்போது கோடை காலம் முடிந்தாலும் வெயில் அதிகமாகவே உள்ளது. எனவே மது விற்பனையை அதிகரிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News