நிலவின் புதிய படங்களை சந்திரயான்-3 அனுப்பியது: லேண்டரில் பொருத்தப்பட்டிருந்த கேமிரா துல்லியமாக படம் பிடித்தது
- கடந்த 5-ந் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது.
- நிலவை நெருங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்தடுத்து லேண்டர் மூலம் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன் பின்னா், புவி வட்டப் பாதையில் வலம் வந்த விண்கலம், கடந்த 1-ந் தேதி புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி பயணம் செய்யும் பாதைக்கு மாற்றப் பட்டது.
அதன் தொடா்ச்சியாக கடந்த 5-ந் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை படிப்படியாகக் குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனா்.
அதன்படி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் சுற்றுப் பாதை தூரம் நிலவின் ஈா்ப்பு விசைக்குள் 2-வது முறையாக நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு குறைக்கப்பட்டது. அப்போது, உந்து கலனில் உள்ள திரவ எரிவாயு கருவி இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1,437 கி.மீ. தூரம் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. இதே நுட்பத்தில் நிலவுக்கும் விண்கலத்துக்குமான தூரம் மேலும் இரு முறை குறைக்கப்பட்டு, அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும்.
இதன்மூலம் நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான உயரம் குறைக்கப்படும். அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் வருகிற 14-ந் தேதி விடு விக்கப்பட்டு, திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி நிலவில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று சந்திரயான்-3 விண்கலம் நிலவின் புதிய படங்களை அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியையும் சந்திரயான்-3 படம் பிடித்து உள்ளது. லேண்டர் கருவியில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கேமிரா மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நிலவின் மேற்பரப்பில் உள்ள கடல் போன்ற பகுதியை சந்திரயான்-3 விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் காட்டி உள்ளன. அந்த பகுதி நிலவின் வடக்கு, தென்கிழக்கு பகுதி யில் 2500 கி.மீ. பரப்பளவுக்கு பரவி உள்ளது.
நிலவை நெருங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்தடுத்து லேண்டர் மூலம் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். வரும் நாட்களில் நிலவுக்கு மிக அருகில் சென்று படம்பிடிக்கும். இதன் மூலம் சந்திரயானில் இருந்து பிரியும் விக்ரம் கருவியை மிக எளிதாக நிலவில் தரை இறக்குவதற்கு வழிவகை செய்யப்படும்.