தமிழ்நாடு

உணவுத்திருவிழா

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் உணவு திருவிழாவில் 'பீப்' பிரியாணிக்கு அனுமதி

Published On 2022-08-13 11:48 IST   |   Update On 2022-08-13 11:48:00 IST
  • உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பீப் பிரியாணி கடைகளுக்கு இன்று மாலை நேரில் செல்ல அமைச்சர் மா.சுப்பிரணியன் முடிவு செய்துள்ளார்.

சென்னை:

சென்னை தீவுத்திடலில் 3 நாள் உணவு திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. இதில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 விதமான தோசை வகைகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா போன்றவையும் உணவு திருவிழாவில் கிடைக்கின்றன.

இந்த உணவு திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். உணவு திருவிழாவுக்கு சென்று பல்வேறு வகையான உணவு வகைகளையும் மக்கள் ருசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, உணவு திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்காக 3 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.

இந்த பீப் பிரியாணி கடைகளுக்கு இன்று மாலை நேரில் செல்ல அமைச்சர் மா.சுப்பிரணியன் முடிவு செய்துள்ளார். இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் உணவு திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமையான நாளை அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News