எந்த நிலையிலும் கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்- உதயநிதி ஸ்டாலின்
- பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
- தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம்.
திருச்சி:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சியில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருச்சி சிந்தாமணியில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பின்போது 6 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கோரிய நிலையில் 900 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.
இந்தி படித்தால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்குவோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேரடியாக கூறுகிறார். இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினோம்.
இருமொழிக் கொள்கை என்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அல்லது இந்தியா கூட்டணியின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கொள்கை . தமிழக மாணவர்களின் கொள்கை.
தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம். எந்த நிலையிலும் கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதற்காக போராடி வருகிறோம்.
பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒருவரை புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்கள் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.