ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின.
ஒகேனக்கல்:
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 5வது நாளாக நீடிக்கிறது.
கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின. இதன் காரணமாக இரு அணைகளில் இருந்து 20 ஆயிரத்து 319 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.
இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 5-வது நாளாக நீடிக்கிறது.