தமிழ்நாடு

அசைவம்- கோழிக்கறி, சைவம்- நெய், வாழைப்பழம்: செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பில் சிறப்பு வசதிகள்

Published On 2023-07-18 11:44 IST   |   Update On 2023-07-18 11:44:00 IST
  • சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
  • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 26-ந் தேதி வரை உள்ளது.

சென்னை:

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி நேற்று மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்வதற்காக செந்தில் பாலாஜிக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பு தேவைப்படும். இதன் காரணமாக புழல் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நிலை நன்றாக தேறிய பிறகு செந்தில் பாலாஜி கைதிகள் அறைக்கு மாற்றப்படுகிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதனை முழுமையாக பார்க்கலாம்.

புழல் சிறை கைதிகளுக்கு காலையில் உணவாக வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி ஆகியவை மாறி மாறி வழங்கப்படுகின்றன. இந்த உணவில் இருந்து முதல் வகுப்பு சிறைவாசியான செந்தில்பாலாஜி விலக்கு கேட்கலாம். தனக்கு சிறையில் உள்ள கேண்டீனில் இருந்து இட்லி, தோசை போன்றவற்றை வாங்கி தருமாறு கேட்கலாம்.

இட்லி, தோசை போன்றவை மற்ற கைதிகளுக்கு எப்போதுமே வழங்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு ஆகியவற்றை மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும். உணவை முதல் வகுப்பு கைதிகள் விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் கேண்டீனில் கிடைக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிடலாம்.

இதே போன்று இரவு உணவையும் அவர்கள் விரும்பியபடி டிபனாகவே எடுத்துக் கொள்ளலாம்.

முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறப்பு உணவாக வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படுவது வழக்கம். அதே நேரத்தில் தனக்கு அசைவ உணவு வேண்டாம் என்று கைதி கோரினால் சைவ உணவாக அவருக்கு சாதத்தோடு பிசைந்து சாப்பிட நெய் வழங்கப்படும். வாழைப்பழம் ஒன்றும் கொடுக்கப்படும். செந்தில் பாலாஜி இவற்றில் ஏதாவது ஒன்றை கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியையொட்டியே முதல் வகுப்பு கைதிகளுக்கான அறைகள் உள்ளன. மொத்தம் 9 அறைகள் முதல் வகுப்பு கைதிகளுக்காக ஒதுக்கி தயார் நிலையில் சகல வசதிகளோடு உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையை சிறை ஊழியர்கள் சுத்தம் செய்து புதிய படுக்கை விரிப்பு உள்ளிட்டவைகளை போட்டு வைத்துள்ளனர். செந்தில் பாலாஜி ஒதுக்கப்பட்டுள்ள அறையில் கட்டில்-மெத்தை போன்றவற்றுடன் தனி சேர், நாற்காலி மற்றும் மேஜை ஒன்றும் போடப்பட்டுள்ளது.

இந்த அறைக்கு மாற்றப்பட்ட பின்னர் செந்தில்பாலாஜி மெத்தையில் படுத்து ஓய்வு எடுக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் நாற்காலியில் அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்து கொள்ளலாம். தினசரி நாளிதழ்கள் புத்தகங்கள் போன்றவையும் முதல் வகுப்பில் வழங்கப்படும்.

மின்விசிறி ஒன்றும் போடப்பட்டிருக்கும். இப்படி முதல் வகுப்பு அறையில் செந்தில் பாலாஜிக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இரவில் ஆஸ்பத்திரியிலேயே தங்கினார். அங்கு இரவில் இட்லி சாப்பிட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். பின்னர் ஆஸ்பத்திரி படுக்கையிலேயே செந்தில் பாலாஜி தூங்கினார்.

செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி என்பதால் அவரை சிறை ஆஸ்பத்திரி டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தபடியே உள்ளனர்.

முதல் வகுப்பு கைதியாக சென்று முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பதால் செந்தில் பாலாஜி மீது கூடுதல் கவனம் செலுத்தி டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தற்போதைய நிலையில், செந்தில் பாலாஜிக்கு வெளிச்சாப்பாடு கிடைக்க வாய்ப்பு இல்லை. அது போன்று வெளியில் இருந்து சிறப்பு சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு கோர்ட்டு மூலமாக அனுமதி பெற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி நேற்று மாலையில்தான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளையே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. நீதிமன்ற காவலில் விசாரணை கைதிகளாக இருப்பவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. அதே நேரத்தில் அவர்கள் விரும்பி சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கலாமா என்பது பற்றி சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 26-ந் தேதி வரை உள்ளது. அன்று அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். மீண்டும் காணொலி வாயிலாக அவர் ஆஜர்படுத்தப்படுவாரா? இல்லை நேரில் ஆஜர்படுத்தப்படுவாரா? என்பது செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பொறுத்தே அமையும்.

வருகிற 26-ந் தேதிக்கு பிறகும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா? அல்லது அதற்குள் அமலாக்கத்துறை காவலில் எடுப்பார்களா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

Tags:    

Similar News