தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு- பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Published On 2025-01-20 17:45 IST   |   Update On 2025-01-20 17:45:00 IST
  • குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் ஜனவரி 26ம் தேதி அன்று 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று இரவு முதல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 5 அடுக்கு பாதுகாப்பு வரும் ஜனவரி 30 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் மோப்ப நாய்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலைய வளாகமும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிபொருட்கள் நிபுணர்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கவனமாக ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அதிகாரிகள், மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும், குறிப்பாக விமானங்கள் நிறுத்துமிடங்கள் உள்ள பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

BCAS பாஸ்கள் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளவற்றுடன் கூடுதலாக, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் இந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வழக்கமான பயணிகள் சோதனைகளைவிட கூடுதலாக பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக பயணிகளின் கைப்பைகள் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும் திரவங்கள், ஊறுகாய், ஹல்வா, ஜாம் மற்றும் எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதேபோல், சரக்கு பார்சல்கள் பல கட்ட சோதனைக்குப் பிறகுதான் விமானங்களில் ஏற்றப்படுகின்றன.

இதனால், கடும் பயணிகள் சோதனைகள் காரணமாக, உள்நாட்டு விமானம் புறப்படுவதற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச விமானம் புறப்படுவதற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்பும் பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News