தமிழ்நாடு

தென்கிழக்கு ஆசியாவில் முதல் மேம்பாலம்: 50 ஆண்டுகளை நாளை பூர்த்தி செய்யும் சென்னை அண்ணா மேம்பாலம்

Published On 2023-06-30 09:51 GMT   |   Update On 2023-06-30 09:51 GMT
  • சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
  • நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது.

சென்னையின் முக்கியமான அடையாளமான ஒன்று அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையில் உள்ள இந்த மேம்பாலத்தின் அருகில் 1976-ம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது. அதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த மேம்பாலம் அழைக்கப்படுகிறது.

அண்ணா மேம்பாலம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. 1971-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24 லட்சத்தை கடந்தது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியது. சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

குறிப்பாக அண்ணா சாலையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை- உத்தமர் காந்தி சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை சந்திப்பு பகுதியில் 1970-ம் ஆண்டுகளில் தினமும் 12 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் விளைவாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். 1971-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கின. 1,500 டன் எக்கு, 3,500 டன் சிமெண்ட் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் மேம்பாலம் இதுவாகும். மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களை தொடர்ந்து இந்தியாவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம் இதுவாகும். அதே நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது. இந்த மேம்பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த பாலத்தை கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.66 லட்சம் ஆகும்.

இந்த மேம்பாலத்தை 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதற்கு 'அண்ணா மேம்பாலம்' என்றும் பெயர் சூட்டினார். மேம்பாலத்தின் அடியில் அண்ணா புத்தகம் வாசிப்பது போன்ற சிலையும் நிறுவப்பட்டது.

பெரியார் மறைவுக்கு பிறகு 1974-ம் ஆண்டு அவரது பிறந்த நாளின் போது மேம்பால பகுதியில் அவரது சிலையை நிறுவ அப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். கோரிக்கை வைத்தார். அதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்தார். சென்னையில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பால பகுதியில் 2 பக்கங்களில் நிறுவப்பட்டன.

இந்நிலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு நாளை (சனிக்கிழமை) 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆனாலும் இன்று வரை கம்பீரமாக காட்சியளிப்பதுடன், சென்னையின் அடையாளமாகவும் தொடர்ந்து திகழ்கிறது. சென்னை தற்போது மேம்பாலங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முதன் முதலில் வித்திட்டது அண்ணா மேம்பாலம் தான். அண்ணா மேம்பால சந்திப்பில் இன்று 3 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த மேம்பாலம் தற்போது ரூ.8.85 கோடி செலவில் சீரமைத்து வலுப்படுத்தப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிகள் விரைவில் முடிந்து விடும். அதன் பிறகு அண்ணா மேம்பாலம் சென்னையின் அடையாளமாக தொடர்ந்து புதுப்பொலிடன் காட்சியளிக்கும்.

Tags:    

Similar News