பிரதமர் மோடி விருப்பப்படி இளைஞர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி பலருக்கு வேலை அளிக்க வேண்டும்- நாகாலாந்து கவர்னர் இல.கணேசன்
- விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
- அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் .
சென்னை:
வி.ஐ.டி சென்னையில் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமையில்
துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் ராம் பாபு கோடாலி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் கலந்து கொண்டு 33 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கினார். விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பேசுகையில், பட்டமளிப்பு விழா என்றென்றும் மாணவர் வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும், ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திகழும். பிரதமர் மோடியின் விருப்பப்படி இளைஞர்கள் வேலை தேடுவதை விட வேலை வாய்ப்பினை உருவாக்கி பலருக்கு வேலை அளிக்க வேண்டும்.
மாணவர்கள் சிந்தனைகளில் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கவனச்சிதறல்களுக்கு மத்தியில் நல்லொழுக்கப் பாதையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (இந்தியா) பாலு சதுர்வே துலா கலந்து கொண்டார்.
முன்னதாக வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன், சிறப்பு விருந்தினர் கவர்னர் இல.கணேசன் ஆகியோர் சுவாமி விவேகானந்தா மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி வளாகக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், வி.ஐ.டி. வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாக ராஜன், வி.ஐ.டி. வேலூர் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெய பாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.