சீர்காழி அருகே சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில் 150 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை
- கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள மங்கைமடம் நெருஞ்சி கொல்லை தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 60). இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ரசாயன தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர், அனைவரும் நேற்று சொந்த ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 150 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை கண்ட செல்வேந்திரன் மிகுந்த வேதனை அடைந்தார்.
பின்னர், உடனடியாக இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, விரைந்து வந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் (பொ) விஜயா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.