தேசியத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக பா.ஜ.க. பொய் பிரசாரம்- முத்தரசன்
- மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
- முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா, சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தது. முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதனை கைவிட வேண்டும்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதித்து வருகிறார். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பாதி உரையை படிக்காமல் சென்றார். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என கூறுகிறார்.
பேரவையின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு என்பது கவர்னருக்கு தெரியும். இருந்தாலும் ஏதாவது குறைகூறி சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்.
பா.ஜ.க. தலைவர்கள் தேசியத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். தேசியத்திற்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்கு விரோதமாகவும் செயல்படும் பா.ஜ.க. கட்சி, அதை மூடி மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.