தமிழ்நாடு

பெரியாரை கொச்சைப்படுத்தும் போக்கை சீமான் கைவிட வேண்டும்- திருமாவளவன்

Published On 2025-01-10 12:21 IST   |   Update On 2025-01-10 12:21:00 IST
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
  • அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும்.

மதுரை:

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அரிட்டாபட்டி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி மேலூர் பஸ் நிலையத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டங்ஸ்டன் எதிர்ப்பு தொடர்பாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். மீண்டும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது.

துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரம், உரிமை இல்லை என்பது போல் கொண்டு வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும்.

அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரமில்லாத அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. நீண்ட காலமாகவே சங்பரிவார் அமைப்புகள் இந்த சதி வேலைகளை செய்து வருகிற சூழலில் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்துவரும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாகவும் குதர்க்க வாதமாகவும் உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு அவருக்கு எதிராக போய் முடியும். தேசிய அளவிலான மத வழி தேசியம் இந்திய அளவில் பேசப்படுகிற மத வழி தேசியம், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பேசுகிற மதவழி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாகவும் இருக்க முடியும்.

அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணியாற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய சமூக நீதியின் தேசிய அடையாளமாக இருக்கிற தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும். அந்த அரசியலை தான் சீமான் பேசுகிறாரா? என்பதை அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தந்தை பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையின்பால் சில விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதில் புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வில்லை. தொன்மை காலத்து சொற்களே உள்ளன. தமிழின் தொன்மையை பேசுவதற்காக பெரியார் அதை குறிப்பிட்டு இருக்கிறார்.

அது காலத்திற்கு ஏற்ப நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும், வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் சொன்னதை சிலர் திரித்து பேசுகின்றனர். பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அது ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News