தமிழ்நாடு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை- 22 ஆண்டுகள் நடந்த வழக்கில் தீர்ப்பு

Published On 2025-01-10 13:42 IST   |   Update On 2025-01-10 13:42:00 IST
  • ஆளும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • போலீஸ் தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

சென்னை:

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் கடந்த 2002-ம் ஆண்டு துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது.

அப்போது எதிர்கட்சியாக இருந்த இருந்த தி.மு.க. உறுப்பினர்கள், சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆளும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் மைக், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களை கொண்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை தாக்கியதாகவும், இதில் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி, உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அ.தி.மு.க. மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தற்போது அமைச்சராக இருக்கும் முன்னாள் கவுன்சிலர் மா.சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்றது. போலீஸ் தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதில் சிலர் பிறழ் சாட்சிக ளாகவும் மாறினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயவேல் இன்று வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News