தமிழ்நாடு

தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து- சீமான் மன்னிப்பு கேட்க சிபிஎம் வலியுறுத்தல்

Published On 2025-01-10 17:30 IST   |   Update On 2025-01-10 17:30:00 IST
  • தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
  • தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது அநாகரீகச் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.

தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை.

ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.

அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை.

ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.

அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News