ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னைக்கு 30 ஆயிரம் ஆடுகள் வருகை
- ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
- சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் 7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.
இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.