தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
- மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.
இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.