தமிழ்நாடு

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அதிரடி வியூகம்

Published On 2024-05-10 05:48 GMT   |   Update On 2024-05-10 05:48 GMT
  • ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
  • தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாடு-புதுச்சேரியில் முடிந்துள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில் உள்ளார்.

ஒரு சில தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பதவியை பறிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்க மாட்டார் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு 1½ ஆண்டுகளில் 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் வர இருப்பதால் அதற்கும் இப்போதே தி.மு.க. தன்னை தயார்படுத்த தொடங்கி விட்டது.

அ.தி.மு.க.வில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருப்பது போன்று தி.மு.க.விலும் கொண்டு வரவேண்டும் என்று தலைமைக்கு ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

காரணம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 5 சட்டசபை தொகுதிகளை ஒரு மாவட்டச் செயலாளர் கவனித்து வருகிறார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் இருப்பதால் அவர் முடிவு செய்வதை பொறுத்துதான் மாவட்டம் பிரிப்பது அமையும் என்று கூறி வருகின்றனர்.

ஆனாலும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சனைக்குரிய மாவட்டங்களில் உள்ள நிலவரங்களை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள காரணத்தால் லண்டனில் இருந்து திரும்பியதும் தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்வார் என கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.


2026 சட்டசபை தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவதற்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என்பதை உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளார்.

அப்படி இருந்தும் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சனை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.

தென்காசி மாவட்டம், நெல்லை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியும் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுகள் கிடைத்து விட்டால் இப்போது உள்ள நிலையே தொடரும்.

ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் ஒரு மாற்றம் தான் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம். 234 தொகுதிகளுக்கும் பாகுபாடின்றி 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நடைமுறையை தலைமை கொண்டு வந்து விடும் என்று பேசிக்கொள்கின்றனர்.

தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர். இதில் ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் 2 சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க தி.மு.க. மேலிடம் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்காகவே அறிவாலயம் பக்கம் கட்சி நிர்வாகிகள் பலர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த விசயத்தில் தலையிடும் போது இளைஞரணியில் உள்ள பலருக்கு முக்கிய பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News