தமிழ்நாடு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அ.தி.மு.க.வுக்கு, தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் கடிதம்

Published On 2023-01-02 12:54 IST   |   Update On 2023-01-02 15:54:00 IST
  • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று அனுப்பி உள்ளார்.
  • இப்போது அனுப்பப்பட்ட கடிதமும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை:

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுதொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி அம்மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க இந்திய ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் அனுப்பினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு அவர் கடிதம் அனுப்பினார். அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அ.தி.மு.க.வில் அப்படி ஒரு பதவியே இல்லை என்று கூறி அந்த கடிதத்தை ஏற்க அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அத்துடன் அந்த கடிதத்தை தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் கமிஷனருக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அ.தி.மு.க. முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்றார்.

இந்த நிலையில் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று அனுப்பி உள்ளார். இப்போது அனுப்பப்பட்ட கடிதமும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது.

ஆவணங்களின் அடிப்படையிலேயே அ.தி.மு.க. தலைமை கழக முகவரியிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News