மக்களுக்காக தி.மு.க. 7வது முறை நிச்சயம் ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- அப்போது, மக்களுக்கு பணியாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்தார்.
சென்னை:
கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
என்னையும், உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் தி.மு.க.வையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. உணர்வோடும் உற்சாகமாகவும் கொண்டாடக் கூடிய பண்டிகை தான் இந்த பொங்கல்.
நம்முடைய ஆட்சி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும், அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 முறை கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டோம். 6-வது முறை என் தலைமையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். 7-வது முறையும் ஆட்சிக்கு நாம்தான் வருவோம் என்று சொல்லி இருக்கிறேன்.
உறுதியாக சொல்கிறேன்... மக்களுக்கு பணியாற்றவே, தொண்டாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன் என தெரிவித்தார்.