திருப்பூர் அரசு பள்ளிக்கு ரூ.17 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டி கொடுக்கும் முன்னாள் மாணவர்கள்
- அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.
- போதிய வகுப்பறை இல்லை என்பதை அறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை. இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:-
1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்துள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூடவும் செய்யப்பட்டு விட்டன.
ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுதுகளாக வளர்ந்து நிற்கிறது.
நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்கபலமாக உள்ளனர் என்றார்.