திருப்பூரில் பஸ் சக்கரம் முன்பு படுத்து வாலிபர் போராட்டம்
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து வெளியே இழுத்து சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் மைதீன் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் நேற்று இரவு திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் கூச்சலிட்டவாறு நின்றார். அப்போது அந்த வழியாக குன்னத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பஸ்சின் முன் சக்கரத்தின் கீழ் தலை வைத்து படுத்தார். இதனால் பதற்றம் அடைந்த டிரைவர் உடனடியாக கீழே இறங்கி அந்த வாலிபரை நகர்ந்து செல்லுமாறு கூறினார்.
பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் அங்கு சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் வாலிபரிடம் எவ்வளவு எடுத்து கூறியும் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. வீட்டில் படுப்பது போன்று 'ஹாயாக' காலுக்கு மேல் கால் போட்டபடி படுத்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து வெளியே இழுத்து சென்றனர்.
அப்போது அவர் 'என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். எப்படியாவது அவளுடன் என்னை சேர்த்து வையுங்கள். இப்போது இல்லை என்றால் எப்போதும் எனக்கு கிடைக்க மாட்டாள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் உயிரை மாய்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்' என போலீசின் காலில் விழுந்து கெஞ்சினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.