தமிழ்நாடு

'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை நறுக்கிய ஆசிரியர்கள்

Published On 2023-06-23 13:46 IST   |   Update On 2023-06-23 13:46:00 IST
  • விடுமுறையின்போது ஸ்டைலாக தலைமுடிவெட்டி இருந்த மாணவர்கள் பலர் அப்படியே பள்ளிக்கு வந்து இருந்தனர்.
  • ஸ்டைலாக இருந்த தலைமுடியை வெட்டுவதை பார்த்ததும் சில மாணவர்கள் மனவேதனை அடைந்து ஆசிரியர்களிடம் கெஞ்சினர்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூரில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கோடை விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்டது. விடுமுறையின்போது ஸ்டைலாக தலைமுடிவெட்டி இருந்த மாணவர்கள் பலர் அப்படியே பள்ளிக்கு வந்து இருந்தனர். புள்ளிங்கோ ஸ்டைல், டபுள் சைடு கோடு, பாக்சர், மஸ்ரூம் கட்டிங், லைன் கட்டிங், டாப் கட்டிங் உள்ளிட்ட விதவிதமான ஸ்டைலில் அலங்கோலமான தலைமுடி இருந்தது.

இதனை கவனித்த ஆசரியர்கள் புள்ளிங்கோ போல் விதவிதமாக தலைமுடியுடன் வந்த மாணவர்களை அழைத்து சரியான முறையில் முடித்திருத்தம் செய்து வரும்படி கூறி இருந்தனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் மாணவர்கள் பலர் வித்தியாசமான தலைமுடியுடன் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை புள்ளிங்கோ ஸ்டைலில் தலைமுடியுடன் வந்த சுமார் 100 மாணவர்களை தலைமை ஆசிரியர் சாய் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் கொத்தாக பிடித்தனர். இதில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் மட்டும் 62 பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் பள்ளி வளாகத்திலேயே மரத்தடியில் அமரவைத்து தலைமுடியை ஒழுங்கான முறையில் நறுக்கினர். இதற்காக முடித்திருத்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

ஸ்டைலாக இருந்த தலைமுடியை வெட்டுவதை பார்த்ததும் சில மாணவர்கள் மனவேதனை அடைந்து ஆசிரியர்களிடம் கெஞ்சினர். ஆனால் அலங்கோலமாக வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடித்திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் செய்து இருந்தார். பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் தலைமுடி ஒழுக்கம் குறித்து ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பினர். இதனால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News