சென்னையில் அதிர்ச்சி சம்பவம்- 3 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
- கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- கைதானவர்களில் 2பேர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர்:
காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மாணவிகளை தனிமையில் அழைத்து சென்று வன்கொடுமை செய்த மாணவர்கள் சிக்கி உள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
பெரம்பூரை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை செய்தபோது மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த எண்ணூரில் லேப் டெக்னீசியன் படித்து வரும் 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் மாயமாகி இருந்தது தெரிந்தது.
மாணவிகள் 3 பேரையும் காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அழைத்து சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவிகளுடன் சென்ற அகரம், செங்கல்வராயனம் தெருவை சேர்ந்த ஐ.டி.ஐ. கல்லூரி மாணவர் அபிஷேக் மற்றும் 16 மற்றும் 17 வயதுடைய 3 பள்ளி மாணவர்கள் மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த கலிமுல்லா, பெரம்பூரை சேர்ந்த யுகேஷ் ஆகிய 6 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
காதலில் வீழ்த்தப்பட்ட பள்ளி மாணவிகள் 3 பேரையும் காதலர்களான மாணவர்கள் வீனஸ் அருகே உள்ள அரசு நூலகத்தின் மாடியில் இரவில் தனிமையில் தங்கி இருந்தும் அங்கு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அவர்களது நண்பர்கள் ஆட்கள் வருவதை நோட்டம் பார்க்க இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களில் யுகேஷ், கலிமுல்லா ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் முத்தியால்பேட்டையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாணவிகள் மிரட்டப்பட்டனரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.