கடற்கரை - தாம்பரம் இடையே அடுத்த மாதம் முதல் ''குளுகுளு'' ரெயில்
- 12 பெட்டிகளை கொண்ட இந்த ‘குளுகுளு’ ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன.
- ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.
சென்னை:
சென்னை ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 'குளுகுளு' வசதி கொண்ட 2 குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இன்னும் 2 வாரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் அடுத்த மாதம் முதல் இந்த 'குளுகுளு' ரெயில் சென்னை பயணிகளுக்காக இயக்கப்படும்.
இந்த ரெயில் ஒரு நாளைக்கு எத்தனை முறை இயக்கப்படும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட இந்த 'குளுகுளு' ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரெயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது.
சென்னை கோட்டத்தில் முதல் கட்டமாக 2 'குளுகுளு' மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் வர இருக்கிற கோடை வெயிலில் இருந்து ரெயில் பயணிகள் தப்பிக்க முடியும்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அடுத்த மாதம் 'குளுகுளு' மின்சார ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரெயில் தயாரிப்புக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ரெயிலில் நவீன மோட்டார்கள் இடம்பெற்றுள்ளதால் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. இந்த ரெயில் பெட்டிகள் விரைவில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சோதனை ஓட்டம் முடிவடைந்ததும் ரெயில் உடனடியாக இயக்கப்படும். எனவே வர இருக்கிற கோடை வெயிலை ரெயில் பயணிகள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த ரெயில் பயணத்துக்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மேற்கு ரெயில்வேயில் 'குளுகுளு' ரெயில்களுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.35, 15 கி.மீ. தூரத்துக்கு ரூ.50, 24 கி.மீ. தூரத்துக்கு ரூ.70, 34 கி.மீ. தூரத்துக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 'குளுகுளு' மின்சார ரெயிலில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான 28.6 கி.மீ. தூரத்துக்கான கட்டணம் ரூ.95 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.