தமிழ்நாடு
நடிகர் மனோஜ் மறைவு- அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

நடிகர் மனோஜ் மறைவு- அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Published On 2025-03-25 22:38 IST   |   Update On 2025-03-26 02:40:00 IST
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல்.
  • தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், " இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஐயா பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், " இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா அவர்கள்.

அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' .

Tags:    

Similar News