தமிழ்நாடு

எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது!- அன்புமணி

Published On 2025-03-13 11:44 IST   |   Update On 2025-03-13 14:41:00 IST
  • தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும்.
  • அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சென்னை:

எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக தேசிய அளவிலான இலவச டெலிபோன் சேவையை பயன்பாட்டில் வைத்து உள்ளது.

1800-233-555 என்ற இந்த எண்ணில் கியாஸ் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த கால்சென்டர்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தங்கள் கேள்விகளுக்கான பதிலை பெறும் வசதி உள்ளது.

ஆனால் இப்போது அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி இந்தியில் மட்டுமே பேசுகிறார்.

தொடர்பு கொண்டு பேசுபவர்களுக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றால் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்வதாக அறிவிக்கிறார்கள். ஆனால் தொடர்பு கொள்வதில்லை.

இந்தியில் பேச தொடரலாம். மற்ற மொழிகளுக்கு இணைப்பில் காத்திருக்கவும் என்று வருகிறது. ஆனால் தொடர்பு கொள்வதில்லை.

தமிழ் மட்டுமே தெரிந்த சாமானிய வாடிக்கையாளர்கள் இந்த மொழி பிரச்சனையால் தங்கள் புகார்களை பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News