'ரூ' என்று மாற்றி இலச்சினை: தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டும்- செல்வப்பெருந்தகை
- மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
- 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.
அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.