தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
- உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர் கோட்டை, களமருதூர், குன்னத்தூர், ஆசனூர், கெடிலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சென்னை:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர் கோட்டை, களமருதூர், குன்னத்தூர், ஆசனூர், கெடிலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.