காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்- டிடிவி தினகரன்
- காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் எனவும் அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தரமான காலை உணவை வழங்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 300-க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த மாநகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் காலை உணவை அம்மா உணவகங்கள் மூலம் தயாரித்து வழங்கினால், மாணவ,மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதோடு, திமுக ஆட்சிக்கு வந்தபின் கவனிப்பின்றி இருக்கும் அம்மா உணவகங்களும் மேம்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
எனவே, மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.