தமிழ்நாடு

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

Published On 2025-03-15 20:07 IST   |   Update On 2025-03-15 20:07:00 IST
  • நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
  • அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.

இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.

சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.

சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News