தமிழ்நாடு

தேங்காய் விலை கடும் உயர்வு - கிலோ ரூ.80-க்கு விற்பனை

Published On 2025-01-27 14:36 IST   |   Update On 2025-01-27 14:36:00 IST
  • தேங்காய் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
  • தற்போது தேங்காய் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து வருகிறது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, பேராவூரணி, நாகர்கோவில், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக 15 முதல் 18 லாரிகளில் சுமார் 200 டன் அளவிற்கு தேங்காய் வரத்து இருக்கும்.

இந்த நிலையில் கடந்த மாதம் முதல் தேங்காய் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து தேங்காய் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு வெறும் 70 டன் தேங்காய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தேவை அதிகரித்து தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.68 வரையிலும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.80வரையிலும் விற்பனை ஆகிறது.

தேங்காய் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த மாதம் வரை பெய்த மழையால் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் பெரும்பாலும் பூச்சியின் தாக்குதலால் சேதமடைந்து உள்ளது.

இதனால் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தேங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் இளநீருக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் இளநீர் காய்களை அதிகளவில் வெட்டி விற்பனை செய்து விட்டனர்.

இதனால் தற்போது தேங்காய் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் 2 மாதம் வரை நீடிக்கும் என்றார்.

Tags:    

Similar News