தமிழ்நாடு

வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்பவர்களை கண்காணிக்கக் கோரி கோர்ட்டில் மனு- டி.ஜி.பி. பதில் அளிக்க உத்தரவு

Published On 2025-01-23 13:25 IST   |   Update On 2025-01-23 17:58:00 IST
  • டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது.
  • ஆம்ஸ்ட்ராங் டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி, சுமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களுக்கு இல்லை.

பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது. சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்க, முறைப்படுத்த விதிகளை வகுக்கும்படி டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டி.ஜி.பி.க்கும், ஸ்விகி, சுமோட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Tags:    

Similar News