தமிழ்நாடு

7-வது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும்: தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

Published On 2025-01-27 16:01 IST   |   Update On 2025-01-27 16:02:00 IST
  • தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும் திராவிட மாடல் அரசு.
  • ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினி, திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும் எல்லாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்குமான ஆட்சியைப் பாகுபாடின்றி வழங்கி வரும் திராவிட மாடல் எனும் மக்கள் அரசின் மீது தமிழ்நாடு எந்தளவு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

தமிழர்களின் பண்பாடும், நாகரிகமும் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட 'இரும்பின் தொன்மை' என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்புத் தாதிலிருந்து, இரும்பைப் பிரித்து எடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரிகம் என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி எனும் பழம்பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, பல்லுயிர்ச் சூழல் கொண்ட பகுதியில் டங்ஸ்டன் என்கின்ற கனிமத்தை எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, அதனைத் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எதிர்த்து நின்றது திராவிட முன்னேற்றக் கழகம். டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்ட விதிகளைத் திருத்தி ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டியபோது, அதற்கும் கண்டனம் தெரிவித்துச் செயல்பட்டது திராவிட மாடல் அரசு.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா காட்டிய வழியில் செயல்படுகின்ற திராவிட மாடல் அரசு மதுரையில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை நாடாளுமன்ற விவாதங்களில் உறுதியான குரலில் எதிரொலித்தனர்.

சட்டமன்றத்திலும் இதற்கான தீர்மானத்தை உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முன்னெடுத்து, மக்களின் குரலாக ஒலித்தேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமின்றி நம் தோழமைக் கட்சியினர், மாற்றுக் கட்சியினர் ஆகியோருடன் எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆதரிக்கின்ற அளவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

திராவிட மாடல் அரசின் உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பாராட்டுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்தனர்.

அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று மறுநாளே குடியரசு நாளான ஜனவரி 26 அன்று சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியமே மதுரைக்கு புறப்பட்டேன். அவர்களிடம் உரையாற்றிய நான், இது என்னுடைய அரசின் வெற்றியல்ல. நம்முடைய அரசின் வெற்றி என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம ஏலங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தன்னுடைய கருத்தை பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தெரிவித்து இருந்தபோதும், சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரித்ததையும் மற்ற கட்சிகள் ஆதரித்ததையும் மனதாரப் பாராட்டி, இது தமிழ்நாட்டின் வெற்றி என்பதை அரிட்டாபட்டி மக்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதனை முழு மனதுடன் வரவேற்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அரிட்டாபட்டி போலவே அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக வல்லாளப்பட்டியில் திரண்டு இருந்தனர். அவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன், உங்களுக்கு என்றும் இந்த அரசு துணையாக இருக்கும் என்பதை தெரிவித்து, மக்கள் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வழங்கினேன். அவர்களின் வாழ்த்து முழக்கங்களும் ஆரவாரமும் இந்த அரசு மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

வல்லாளப்பட்டியில் கழகத் தொண்டர் ஒருவர் என்னிடம் ஒரு தாளைக் கொடுத்தார். அதனைப் படித்துப் பார்த்த பொழுது மிகவும் மனம் நெகிழ்ந்தேன். அதில், "டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யக்கோரி மக்களின் மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக நமது A.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில், நமது பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பு: கடந்த 1984ல் இதே இடத்தில் டாக்டர் கலைஞர் உரையாற்றினார். 41 வருடங்களுக்குப் பிறகு தற்போது எங்களது ஊரில் தாங்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது" என்று எழுதப்பட்டிருந்தது. கழகத் தொண்டரின் அந்த உணர்ச்சிமிகு சொற்களில் நான் என்னை மறந்தேன். இதுதான் தி.மு.க. என்கின்ற மக்கள் இயக்கம். எத்தனை ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் மக்களின் உரிமைக்காக இன்றும் துணை நிற்கின்ற மாபெரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் உங்களில் ஒருவனாக என்னுடைய தலைமையிலான திராவிட மாடல அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி, நம் உயர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரோடு கலந்த உடன்பிறப்புகளான உங்களையும் சந்தித்து மகிழ்வேன்! ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்!.

இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News