தரமற்ற குடிநீர்-குளிர்பானம் உற்பத்தி செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம்
- ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
- காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது அதன் கலரை கவனித்து வாங்க வேண்டும்.
சென்னை:
வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோடை காலத்திற்கு இன்னும் 2 மாதங்கள் இருந்தாலும்கூட, காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் குடிநீர், பழங்கள், குளிர் பானம் ஆகியவற்றை மிக கவனமாக வாங்கி அருந்துங்கள் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
வெயில் காலம் தொடங்க இருப்பதால் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை அதிகளவில் பயன் படுத்துவதில் கவனம் வேண்டும். தினமும் 2½ லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதனை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். தர்பூசணி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. பழம் வகைகளை வாங்கி சாப்பிடும் போது அதில் கலப்படம் இருக்கிறதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது அதன் கலரை கவனித்து வாங்க வேண்டும்.
காலை வெயில் உடலுக்கு நல்லது. மதியத்திற்கு பிறகு தாக்கும் வெயிலை தவிர்ப்பது நல்லது. இளநீர், பழம் விற்பனையில் ஈடுபடுவோர் பெரிய குடையை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்யக் கூடிய வியாபாரிகள் குடைகளை பயன்படுத்தினால் நல்லது. குடிநீர் பாட்டில்களில் தரமானது எவை என்பதை கவனித்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் பாட்டில்களில் கலப்படம் வருகிறது. சிறு தொழிலுக்கான சான்றிதழ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தவும்.
முறையான பரிசோதனை இல்லாமல் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்பதையும், அதை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு கலர் கலராக இருக்கும் குளிர்பானங்களை வாங்கி கொடுக்காதீர்கள்.
தரமற்ற குடிநீர், குளிர் பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகலாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு விரோதமாக உணவுப் பொருட்களை தயாரித்து விற்பவர்கள் மீது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே கோடை காலம் தொடங்க இருக்கிற நிலையில் பொதுமக்கள் தரமான சுகாதாரமான குடிநீர், குளிர்பானம், பழச்சாறு ஆகியவற்றை வாங்கி குடிக்க வேண்டும்.
போலி மற்றும் சுகாதாரமற்றவைகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.