தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் பலி
- ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
- இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.
இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.
சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.
உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.