காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைகிறது- சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
- வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
- கடந்த வாரம் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி விட்டன.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது.
தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன. 80 சதவீத நீர்நிலைகள் நிரம்பி விட்டன. பருவமழையும் இயல்பான அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டு உள்ளது. இதன் தொடர்புடைய சுழற்சியானது சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. வரை நீண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று (17-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை (18-ந்தேதி) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
19-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா? என்பதை வானிலை ஆய்வாளர்கள் கண்காணிக்கிறார்கள்.
தமிழக கடலோரப் பகுதியை நோக்கி காற்றழுத்தம் நகர்வதால் வடதமிழகத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி விட்டன. அதன் கொள்ளளவை விட கூடுதலாக தண்ணீர் வந்ததால் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் சென்னையில் உள்ள அனைத்து நீர்நிலைகளும், ஏரிகள், கால்வாய்கள் நிரம்பிய நிலையில் காட்சி அளிக்கின்றன.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஏரி, குளம், வாய்க்கால் கரையோரம் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் அதி கனமழை பெய்தால் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளின் கரையோரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் அடையாறு ஆற்றின் ஓரம் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.