தமிழ்நாடு
பொதுச்செயலாளர் பதவிக்கு குறி? - செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை மிரட்டுகிறதா பா.ஜ.க.?

பொதுச்செயலாளர் பதவிக்கு குறி? - செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை மிரட்டுகிறதா பா.ஜ.க.?

Published On 2025-03-29 13:05 IST   |   Update On 2025-03-29 13:05:00 IST
  • த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
  • கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.?

டெல்லி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு செங்கோட்டையன் குறி வைக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு இ.பி.எஸ். பதவி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இ.பி.எஸ். புறக்கணிப்பதால் பா.ஜ.க. உதவியுடன் தனது இருப்பை தக்க வைக்க செங்கோட்டையன் முயல்கிறாரா?

த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது. செங்கோட்டையனுடனான மோதலுக்கு பின்னரே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இ.பி.எஸ். சந்தித்து பேசினார்.

இபிஎஸ்-ஐ காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு முயற்சிக்கிறாரா செங்கோட்டையன்? தர்மயுத்தம் நடத்தினால் ஆதரவு கிடைக்காது என்பதால் பா.ஜ.க. உதவியை நாடி உள்ளாரா?

கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகாவிட்டால் ஷிண்டேவாக மாறுகிறாரா செங்கோட்டையன் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு இணங்காவிட்டால், செங்கோட்டையனை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு தேர்தலில் களம் காண பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News