குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
- ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேர் உடல்களை மீட்டனர்.
காரில் வந்தவர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோரும் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
செல்வராஜ் குடும்பத்தினர் ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.