ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி மனு- பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
- வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் கட்சியின் நிர்வாகி ஆவார். அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.