தமிழ்நாடு

சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் செயல்பாடு முன்பு போல இருக்காது- அமைச்சர் ரகுபதி

Published On 2024-12-21 06:41 GMT   |   Update On 2024-12-21 06:41 GMT
  • 3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம்.

புதுக்கோட்டை:

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூக விரோதிகள், பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கட்சியில் சேர்ப்பது, பதவிகளை கொடுப்பது பா.ஜ.க.வே, தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. இதற்கு ஏற்கனவே பலமுறை ஆதாரத்தோடு பெயர் பட்டியலோடு நிரூபித்து இருக்கின்றோம்.

தி.மு.க.வில் தெரிந்து நாங்கள் செய்வது கிடையாது. தெரியாமல் எங்கேயாவது நடந்திருந்தால் உடனடியாக கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்படுவார்கள்.



சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவுக்கே பொதுவான அம்பேத்கரை பற்றி அமித்ஷா கூறியதைப் பற்றி கேட்டால் ஜெயக்குமார் பேசிய கருத்துதான் எனது கருத்து என்று கூறுகிறார். அப்படி கூறுவதற்கு பொதுச்செயலாளர் பதவி எதற்கு.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் கவர்னர் அவருக்கு பிடித்தபடி செய்ய வேண்டும் என்று கூறினால் அதற்கான ஆள் நாங்கள் கிடையாது. நாங்கள் சட்டப்படி செய்கிறோம். சட்டப்படி இல்லை என்றால் யார் வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். கவர்னர் 4-வதாக யு.சி.ஜி.யில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் இதுவரை அப்படி யாரையும் சேர்க்கவில்லை. புதிதாக அப்படி யாரையும் சேர்க்க முடியாது என்பதுதான் எங்களது வாதம்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எங்கள் வாதத்தையும் நியாயத்தையும் எடுத்து வைப்போம். சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் கடந்த கால செயல்பாடு தற்போது இருக்காது என்று எண்ணுகின்றோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம். எதிர்க்கட்சிகள் சிதறி கிடைப்பது எங்களுக்கு வலிமை தான். ஆனால் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று வர வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் விரும்புவார். தகுதியே இல்லாத ஆட்களோடு போட்டியிட விரும்பமாட்டார். என்றைக்கும் ஆரோக்கியமான போட்டிதான் அவருக்கு பிடிக்கும்.

நெல்லையில் 2 கொலைகளில் இதுவரை 4 பேரை பிடித்துள்ளனர். போலீசார் துரிதமாக செயல்பட்டுள்ளனர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. தனிப்பட்ட முன்விரோதத்தில் நடைபெறும் சம்பவங்களை எப்படி முன்கூட்டி தடுக்க முடியும். கோர்ட்டுக்கு வெளியே நடந்த கொலைக்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News