தமிழ்நாடு

கேமரா பதிவுகளை வெளியிட வேண்டியது தானே? ராகுல் மீதான புகார் தொடர்பாக ப.சிதம்பரம் கேள்வி

Published On 2024-12-21 07:22 GMT   |   Update On 2024-12-21 07:25 GMT
  • பாராளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?
  • உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?

சென்னை:

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் நேருக்கு நேர் போட்டி போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து 2 பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் தங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராகுல் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில், பாராளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?

நுழைவாசலிலும் பாராளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே?

அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?

உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே? என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில்,

பாராளுமன்ற நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டும் என்பது கோரிக்கை...

இந்த எளிய கோரிக்கையைப் புரிந்த கொள்ள முடியாதா?

இதற்கு 'வெளியிட வேண்டும்' அல்லது 'வெளியிட வேண்டாம்' என்ற இரண்டில் ஒன்று தானே பதிலாக இருக்க முடியம்?

நேரடியாகப் பதில் சொல்வதை ஏன் அரசு தவிர்க்கிறது?

இந்தக் கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் வாதப்பிரதிவாதம், வியாக்கியானம், தத்துவம் எல்லாம் எதற்கு? என்று பதிவிட்டுள்ளார். 




Tags:    

Similar News