தமிழ்நாடு

அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி எடுக்கும்... அதன்பின் கோடை மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் கணிப்பு

Published On 2025-03-30 15:02 IST   |   Update On 2025-03-30 15:02:00 IST
  • ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
  • ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தென் மாவட்டங்களில் கோடை மழை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ள போதிலும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 3 நாட்களும் கோடை வெயில் வாட்டி எடுக்கும் என்றும் அதன் பின்னர் 2 வாரங்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. சேலத்தில் 39.8 டிகிரி செல்சியசும், வேலூரில் 39.7 டிகிரி செல்சியசும், ஈரோடடில் 39.6 டிகிரி செல்சியசும், சென்னை மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியசும், கரூர், பரமத்தி, தர்மபுரி பகுதிகளில் 39 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் எந்த பகுதியிலும் நேற்று மழை பெய்யவில்லை.

இன்று முதல் 3 நாட்களுக்கு (ஏப்ரல் 2-ந்தேதி வரையில்) கடலோர மாவட்டங்களில் 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருப்பத்தூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 3-ந்தேதி முதல் கோடை வெப்பச்சலன மழை படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News