தமிழ்நாடு

2 நாட்கள் மட்டுமே நடந்த சட்டசபை கூட்டம்: ஜனநாயகத்தை வளரவிடாமல் அழிக்கும் செயல்- ராமதாஸ் அறிக்கை

Published On 2024-12-12 07:08 GMT   |   Update On 2024-12-12 07:09 GMT
  • ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.
  • தமிழ்நாடு அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. விடுதலைக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.

அதேபோல், நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாட்களுக்கு மட்டும் தான் பேரவைக் கூடியிருக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் மிகக்குறைந்த நாட்களுக்கு சட்டப்பேரவை நடைபெற்ற ஆண்டும் இது தான்.

தமிழ்நாடு அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன. அவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது வெறும் 8 நாட்களில் விவாதம் நடத்தப்பட்டால், அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? ஆண்டுக்கு வெறும் 14 நாட்கள் மட்டுமே விவாதம் நடத்தப்பட்டால் 234 தொகுதிகளின் உறுப்பினர்களும் தங்கள் தொகுதியின் பிரச்சனைகள் குறித்தும் எந்த அளவுக்கு பேச முடியும்? என்ற அக்கறை திமுக அரசுக்கு சிறிதும் கிடையாது. அதிக நாட்களுக்கு அவைக் கூட்டம் நடைபெற்றால் தாங்கள் அதிக அளவில் அம்பலப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு அவையை நடத்துகிறது.

சட்டப்பேரவைகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள். அங்கிருந்து தான் ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், நாற்றங்கால்களையே கருகச் செய்து ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத் தான் தி.மு.க. அரசு செய்கிறது. அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான தண்ட னையை அவர்கள் தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News