மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கோடைகால விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மார்ச் 28-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைக்கால சிறப்பு மலை ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரெயில், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.